கேஎல் ராகுல் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தத் துவங்கினால், அவரை நிறுத்துவது கடினம் என்று கே எல் ராகுலுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார் ஷேன் வாட்சன்.
டி20 உலக கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றி விடும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. துரதிஷ்டவசமாக, அரையிறுதியோடு வெளியேறியது.
இந்திய அணிக்கு எதிர்பார்த்த துவக்கம் தொடர் முழுவதும் கிடைக்காதது பின்னடைவாக அமைந்துவிட்டது. ரோகித் சர்மா 6 போட்டிகளில் 116 ரன்கள், கேஎல் ராகுல் 6 போட்டிகளில் 128 ரன்கள் மட்டுமே அடித்திருந்தனர்.
கே.எல் ராகுல் இரண்டு அரைசதங்களை அடித்து இருந்தாலும் மற்ற நான்கு போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களிலேயே ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
நல்ல ஃபார்மில் தான் இருக்கிறார். ஆனால் சரியான ஷாட்களை அடிப்பதற்கு சற்று தயக்கம் காட்டி வருகிறார். இந்த தயக்கத்தை விட்டொழியுங்கள் என்று கே.எல். ராகுலுக்கு அறிவுரையும் ஆதரவையும் கூறியுள்ளார் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் துவக்க வீரர் மற்றும் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன்.
“குறிப்பாக கேஎல் ராகுலுக்கு நான் ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அவர் சிறந்த ஃபார்மில் தான் இருக்கிறார். ஆனால் தயக்கத்துடன் விளையாடுவது தான் அவருக்கு பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது. தயக்கத்துடன் நிறைய பந்துகளை டாட் வைக்கிறார். அந்த தருணத்தில் ஓரிரு ரன்கள் அடித்தால் நல்ல நம்பிக்கை கிடைக்கும்.”
நேர்த்தியான ஷாட்களை அடிக்கக்கூடிய வீரர். பவுலர்களை எளிதில் அழுத்தத்திற்கு உண்டாக்கக் கூடியவர். ஏனெனில் மைதானத்தின் அனைத்து புறங்களிலும் அடிக்கும் அளவிற்கு ஷாட்கள் வைத்திருக்கிறார்.
காயத்திற்கு பின் தயக்கத்தில் அதிகமாக தடுப்பாட்டம் விளையாடுகிறார். எதிர்த்து அடிக்கவேண்டும் என்ற மனநிலைக்கு வருவதற்கு வழக்கத்திற்கு அதிகமான நேரத்தை எடுக்கிறார். இதுதான் அவரை மேலும் அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது.
கேஎல் ராகுல் அடிப்பதற்கு துவங்கினால், அவரை நிறுத்துவதற்கு எளிதில் முடியாது. அவரது பேட்டிங்கில் எந்த பிரச்சனையும் இல்லை. மனதளவில் மட்டுமே பிரச்சினை உள்ளது. அதனை அணி நிர்வாகம் சரி செய்வதற்கு பல்வேறு முயற்சிகளை எடுக்க வேண்டும். ஏனெனில் அணியின் துணை கேப்டனாக ராகுல் இருக்கிறார்.” என்று அறிவுறுத்தினார் ஷேன் வாட்சன்.