தோனியின் இடத்தை நிரப்பி, நானும் பல போட்டிகளில் இந்திய அணிக்காக வெற்றியைப் பெற்றுத்தருவேன் என சூளுரைத்துள்ளார் இஷான் கிஷன்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ராஞ்சி போன்ற சிறிய நகரில் இருந்து வந்து, இந்தியாவிற்கு கேப்டனாகி, முதன்முதலாக டெஸ்ட் போட்டிகளில் தரவரிசையில் இந்தியாவை நம்பர் 1 இடத்திற்கு கொண்டுவந்து நம்பிக்கையை உண்டாக்கினார்.
2007ஆம் ஆண்டு நடந்த முதல் டி20 உலக கோப்பையை இந்தியாவிற்கு பெற்றுக்கொடுத்தார். பின்னர் 2011ஆம் ஆண்டு 50-ஓவர் உலகக் கோப்பையை இந்தியாவிற்கு பெற்றுக் கொடுத்தார். 28 ஆண்டுகள் கழித்து இந்தியா உலககோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு, 2013 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் பலம்மிக்க அணியாக காணப்பட்ட இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியாவிற்கு கோப்பையை பெற்றுக் கொடுத்தார்.
இப்படி கேப்டன் பொறுப்பிலும், தனிப்பட்ட பேட்டிங்கிலும் கீப்பிங்கிலும் சாதித்த மகேந்திர சிங் தோனி, கடைசியாக 2019ம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய அணிக்காக விளையாடினார். 2020ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வும் பெற்றார்.
அவரைப் பார்த்து இஷான் கிஷன், ரிஷப் பண்ட் போன்ற இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் இந்தியாவிற்கு வந்திருக்கின்றனர். தோனி தான் தங்களது ரோல் மாடல் என்று இருவரும் பலமுறை கூறியுள்ளனர். தோனியின் இடத்தையும் நிரப்புவதற்கு போராடி வருகின்றனர்.
இந்திய அணியின் முன்னணி விக்கெட் கீப்பராக இருந்து வந்த ரிஷப் பண்ட், சமீபத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆகையால் இஷான் கிஷன் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்று விளையாடி வருகிறார்.
இஷான் கிசனுக்கு டி20 போட்டிகளில் முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. ஒருநாள் போட்டிகளில் கே எல் ராகுல் இல்லாத நேரத்தில் மட்டுமே உள்ளே எடுத்து வரப்படுகிறார். வரவுள்ள ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் முதல் முறையாக அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறார். பிளேயிங் லெவனில் வாய்ப்புகள் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் காண வேண்டும்.
இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கு முன்பு பிசிசிஐ டிவிக்கு நேர்காணல் கொடுத்த இஷான் கிஷன், பல கேள்விகளுக்கு பதில் கொடுத்தார். அப்போது மகேந்திர சிங் தோனி பற்றி பேசினார்.
“அவரைப் பார்த்து வளர்ந்த மற்றும் எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி. இருவரும் ஒரே இடத்தில் இருந்து வந்திருக்கிறோம். நானும் உள்ளூர் போட்டிகளில் ஜார்கண்ட் அணிக்காக விளையாடி வருகிறேன். இந்திய அணியிலும் அவரது இடத்தை நிரப்புவதற்கு விரும்பினேன். தற்போது இந்த இடத்தில் இருக்கிறேன. இந்த நேரத்தில் அனைவருக்கும் ஒன்றை கூறிக்கொள்ள நான் விரும்புகிறேன். நிச்சயம் தோனியைப் போல சிறப்பாக விளையாடி இந்திய அணிக்காக பல போட்டிகளை வென்று கொடுப்பேன்.” என்றார்.
Secret behind jersey number 🤔
Getting the legendary @msdhoni's autograph ✍️
Favourite cuisine 🍱Get to know @ishankishan51 ahead of #INDvNZ T20I opener in Ranchi 👌🏻👌🏻#TeamIndia pic.twitter.com/neltBDKyiI
— BCCI (@BCCI) January 26, 2023