இதெல்லாம் பத்தாது தம்பி… கோஹ்லிக்கு முன்னாள் பயிற்சியாளர் அட்வைஸ்
ஒரு சிறந்த கேப்டனாக கோஹ்லி இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்று தென் ஆப்ரிக்கா அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜென்னிங்ஸ் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த நிலையில், இரு அணிகள் இடையேயான ஆறு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது.
ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற மிக முக்கிய காரணமாக இருந்த கேப்டன் கோஹ்லியை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு கேப்டனாக கோஹ்லியின் செயல்பாடுகள் இன்னும் மேம்பட வேண்டும் என்று தென் ஆப்ரிக்கா மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளின் முன்னாள் பயிற்சியாளரான ஜென்னிங்ஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய ஜென்னிங்ஸ் “எனது பார்வையில் கோஹ்லி இன்னும் ஒரு சிறந்த கேப்டனாக தன்னை முன்னேற்றி கொள்ளவில்லை. சிறந்த கேப்டனாவதற்கு கோஹ்லி இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டி வரும். முன்னாள் கேப்டன் தோனியுடன் கோஹ்லியை ஒப்பிட்டு பார்க்கும் போது, தோனியை விட கோஹ்லி முற்றிலும் மாறுபட்டவர். தோனி அமைதியின் உருவம், ஆனால் கோஹ்லி அவருக்கு அப்படியே எதிரானவர்” என்று தெரிவித்துள்ளார்.