சாம்பியன்ஸ் டிராபி 2017அரையிறுதி போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய பிறகு ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது இந்தியா.
எட்பாஸ்டன் மைதானத்தில் நடந்த அரையிறுதி போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்று, ஒருநாள் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணியை பின்னுக்கு தள்ளி 2வது இடத்தை பிடித்தது இந்தியா. அதே போல், இந்த சாம்பியன்ஸ் டிராபியில் கலக்கி கொண்டு வரும் பாகிஸ்தான் அணி,ஒரு படி முன்னேறி இலங்கையை பின்னுக்கு தள்ளியது.
இந்த சாம்பியன்ஸ் டிராபியில் இதுவரை 3 போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோல்வியை கண்டது இந்தியா. இதே போல், பாகிஸ்தான் அணியும் 3 போட்டிகளில் வென்று, ஒரு போட்டியில் தோல்வியும் பெற்றுள்ளது.
கென்னிங்டன் ஓவல், லண்டன் மைதானத்தில் நடக்க உள்ள இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் ஒருநாள் தரவரிசையில் ஒரு இடம் முன்னேறுவார்கள். இந்திய அணி வெற்றி பெற்றால் தென்னாபிரிக்கா அணியை பின்னுக்கு தள்ளி, முதல் இடத்தை பிடிக்கும். அப்படி தோல்வி பெற்றால், ஆஸ்திரேலியா மேலுக்கு வந்து, 3வது இடத்திற்கு இந்தியா செல்லும்.
அதேபோல், 7வது இடத்தில இருக்கும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால், 6வது இடத்திற்கு செல்லும். அப்படி தோல்வி பெற்றால் மறுபடியும் இந்த தொடர் தொடங்கும்போது எங்கு இருந்ததோ, அந்த 8வது இடத்திற்கே செல்லும்.
தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணி இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடாததால், அவர்களின் நெட்-ரன் ரேட் குறைந்துள்ளது. அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றதால், 4வது இடத்தில நீடிக்கிறது இங்கிலாந்து அணி.
சாம்பியன்ஸ் ட்ராபி 2017-யின் இறுதி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும். அப்படி வெற்றி பெறவில்லை என்றால், 8வது இடத்திற்கு செல்லும், அதுமட்டும் இல்லாமல், 2019 உலக கோப்பையில் விளையாடும் தகுதியையும் இழக்க வாய்ப்பு உள்ளது.
ஆனால், வங்கதேச அணி தான் சந்தோசமாக இல்லை. இந்த சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக விளையாடியும் ஒரு படி கூட அந்த அணியால் முன்னேற வில்லை. 5வது இடத்தில் இருக்கும் நியூஸிலாந்து அணி 111 புள்ளிகளுடனும், 6வது இடத்தில் இருக்கும் வங்கதேசம் அணி 93 புள்ளிகளுடன் இருப்பதால், அந்த அணியால் நியூஸிலாந்தை பின்னுக்கு தள்ள முடியவில்லை.