2023 உலகக்கோப்பை முடியும்வரை யாருக்கும் ஓய்வு கொடுக்கக்கூடாது என அறிவுரை கூறியுள்ளார் சுனில் கவாஸ்கர்.
நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. விராட் கோலி, கேஎல் ராகுல், ரோகித் சர்மா, அஸ்வின் ஆகியோர் ஓய்வில் இருந்தனர். வங்கதேசம் அணியுடன் நடக்கும் தொடரின்போது மீண்டும் அவர்கள் அணிக்கு திரும்புகின்றனர்.
இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு ஏன் ஓய்வுகள் கொடுக்க வேண்டும்? அவர்களை தொடர்ந்து விளையாட வையுங்கள்! இனி அடுத்த ஒரு வருடத்திற்கு ஓய்வு என்பது இருக்கக் கூடாது! என்று அறிவுறுத்தி இருக்கிறார் சுனில் கவாஸ்கர். அவர் கூறியதாவது:
“2023 ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு இன்னும் ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே இருக்கின்றது. ஆகையால் முன்னணி வீரர்கள் எவருக்கும் ஓய்வுகள் கொடுக்காமல், அதிக அளவில் ஒன்றாக பேட்டிங் விளையாடுவதற்கு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இரு வீரர்களுக்கும் இடையே நல்ல புரிதல் ஏற்படும்.
லிமிடெட் ஒவர் போட்டிகளில் குறிப்பாக, ஒருநாள் போட்டிகளில் பார்ட்னர்ஷிப் மிகவும் முக்கியம். நல்ல பாட்னர்ஷிப் அமைந்தால் மட்டுமே அணியை எவ்வளவு பெரிய ஸ்கொர் எட்டுவதற்கு எடுத்துச் செல்ல முடியும்.
டி20 உலக கோப்பையில் நடந்தது போல மீண்டும் ஒருமுறை நடந்து விடக்கூடாது. அதை பார்ப்பதற்கு ரசிகர்கள் தயாராக இல்லை. தவறுகள் நடப்பதற்கு இனியும் இடம் கொடுக்க முடியாது.” என்று கூறினார்.
வாசிம் ஜாபர் சீனியர் வீரர்கள் இல்லாததை பற்றி பேசியதாவது:
“ஒருநாள் தொடரில் ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா இருவரும் இல்லை. இவர்கள் இருந்திருந்தால் இந்தியாவிற்கு பவுலிங் பிரச்சினை வந்திருக்காது. இருவரும் சிறப்பாக பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டும் செய்வார்கள். தற்போது அதுதான் மிகப்பெரிய குறையாக அமைந்ததுவிட்டது. ஹர்திக் பந்தியாவிற்க்கு ஏன் ஒருநாள் போட்டிகளில் ஓய்வு கொடுத்தீர்கள். அவர் இல்லாமல் கூடுதல் பவுலர் வேண்டுமா? வேண்டாமா? என்ற குழப்பம் வருமென்று தெரியவில்லையா?” என்று சாடினார்