ஓடியே சதம் அடித்து சாதித்த கேப்டன் கோஹ்லி… புதிய சாதனை படைத்துள்ளார்
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, விநோத சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த நிலையில், தென் ஆப்ரிக்கா அணியுடனான ஆறு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி கேப்டவுனில் நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் கோஹ்லி 159 பந்துகளில் 160 ரன்கள் எடுத்து கைகொடுத்தன் மூலம் இந்திய அணி தென் ஆப்ரிக்காவிற்கு 304 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்து, 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றது.
அவரது ஸ்கோரில் பவுண்டரி, சிக்சர் மூலம் 60 ரன்கள் அடங்கும். மீதியுள்ள 100 ரன்களை கோலி ஓடிதான் எடுத்தார். ஒரு ரன்களாக 75 முறையும் (75 ரன்), 2 ரன்களாக 11 தடவையும் (22 ரன்), 3 ரன்களாக ஒரு தடவையும் (3 ரன்) எடுத்தார். 100 ரன்களை ஓடி எடுத்த முதல் இந்தியர் கோஹ்லி ஆவார். சர்வதேச அளவில் 5-வது வீரர் ஆவார்.
இதே மைதானத்தில் இதே தினத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் டுபிளிஸ்சிஸ் 103 ரன்களை (ஸ்கோர் 185) ஓடி எடுத்திருக்கிறார்.
மேலும் கோலி அதிகமான பந்துகளை சந்தித்தது இதுவே முதல்முறையாகும். 2012 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக டாக்கா மைதானத்தில் 148 பந்தில் 183 ரன்கள் எடுத்தார். இந்திய தொடக்க வீரர்கள் அல்லாத வகையில் அதிக பந்துகளை சந்தித்தவர் கோலி ஆவார். இதற்கு முன்பு அசாருதீன் 154 பந்தில் 83 ரன்கள் (1986) எடுத்து இருந்தார்.