பிசிசிஐ-யால் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது சீசன் ஏப்ரல் 7-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான ஏலம் நாளைமறுநாள் (27-ந்தேதி சனிக்கிழமை) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (28-ந்தேதி) பெங்களூருவில் நடக்கிறது.
இது அனைத்து வீரர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஏலம் ஆகும். ஏனெனில் இதுவரை அவர்கள் இடம்பிடித்திருந்த அணியில் தொடர்ச்சியாக இருக்க வாய்ப்பில்லை. அணிகள் மாற வாய்ப்புள்ளது. அப்போது எவ்வளவு தொகைக்கு ஏலம் போகிறோம். எந்த அணி ஏலம் எடுத்துள்ளனர் என்பதை அறிய வீரர்கள் அறிய ஆவலாக இருப்பார்கள்.
தற்போது U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்ற வருகிறது. இதில் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. காலிறுதி நாளை நடைபெறுகிறது. இதில் வங்காள தேசத்தை இந்தியா எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால், 30-ந்தேதி நடைபெற்று 2-வது அரையிறுதியில் பாகிஸ்தானை எதிர்த்து இந்தியா விளையாடும்.
தற்போது U19 இந்திய அணியில் இடம்பிடித்துள்ள கேப்டன் பிரித்வி ஷா, ஷுபம் கில், ஹிமான்ஷு ராணா, அபிஷேக் ஷர்மா, ரியான் பராக், கம்லேஷ் நகர்கோடி, ஷிவம் மவி, அர்ஷ்தீப் சிங், ஹர்விக் தேசாய் ஆகியோர் ஏலத்தில் இடம்பெற உள்ளனர்.
இவர்களை எந்தெந்த அணிகள் ஏலம் எடுக்கின்றனர் என்பதை அறிவ ஆவலாக இருப்பார்கள். இதனால் ஆட்டத்தின் கவனம் திசைதிரும்ப வாய்ப்புள்ளது. இருந்தாலும் ஐபிஎல் ஏலம் வருடந்தோறும் வரும். உலகக்கோப்பை அப்படி வருவதில்லை. இதனால் இளம் வீரர்கள் ஆட்டத்தின் மீதுதான் கவனம் செலுத்துவார்கள் என பயிற்சியாளர் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிராவிட் கூறுகையில் ‘‘வீரர்களுக்கு ஐபிஎல் ஏலம் மீது கவனம் இருக்கும் என்பதை மறைப்பதற்கில்லை. குறுகிய கால ஏலம் முக்கியமானதா? அல்லது நீண்ட நாள் பயனளிக்கும் உலகக்கோப்பை முக்கியமானதா? என்பது குறித்து வீரர்களிடையே கட்டாயம் பேசுவோம்.
ஐபிஎல் ஏலத்தை வீரர்களால் கன்ட்ரோல் செய்ய முடியாது. ஒன்று அல்லது இரண்டு ஏலம் வீரர்களின் நீ்ண்ட கால கிரிக்கெட் வாழ்க்கையை பாதிக்காது.
ஏலம் ஒவ்வொரு ஆண்டும் வரும். உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு ஒவ்வொரும் ஆண்டும் வாய்ப்பதில்லை. இது அடிக்கடி வராது’’ என்றார்.