கதை என்ன?
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 200 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் டோணி படைத்தார்.
ஒருவேளை உங்களுக்கு தெரியவில்லை என்றால்…
இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்தவர்கள் பட்டியலில் முதலில் சச்சின் டெண்டுல்கர் 195 சிக்ஸர்களுடன் இருந்தார். கடைசியாக விளையாடிய தொடரின் போது சச்சின் டெண்டுல்கரை முந்தி இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார்.
இவர்களுக்கு அடுத்து 190 சிக்ஸர்களுடன் சவுரவ் கங்குலியும், 155 சிக்ஸர்களுடன் யுவராஜ் சிங்கும், 136 சிக்ஸர்களுடன் விரேந்தர் சேவாக்கும் இருக்கிறார்கள்.
விவரங்கள்:
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 3வது ஒரு நாள் போட்டி ஆண்டிகுவாவில் நடைபெற்றது.
தொடக்கத்தில் தடுமாறிய இந்திய அணி ரகானே, டோணி, கேதர் ஜாதவின் பொறுப்பான ஆட்டத்தால் 251 ரன்களை குவித்தது. 72 ரன்கள் எடுத்து ரகானே ஆட்டமிழந்தார். 112 பந்துகளில் நான்கு பவுண்டரி ஒரு சிக்சர் உதவியுடன் இந்த ரன்களை அவர் குவித்தார். சிறப்பாக விளையாடி டோணி 78 ரன்களை குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 79 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர்கள் உதவியோடு இந்த ரன்களை குவித்து அசத்தினார்.
அடுத்து என்ன?
இந்த போட்டியில் தான் டோணி தனது 200வது சிக்சரை அடித்து சாதனை புரிந்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் 200வது சிக்சர் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், இந்த போட்டியின் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த விக்கெட் கீப்பர் வரிசையில் ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்டை (9410 ரன்கள்) முந்தி 2ஆவது இடம் பிடித்தார் டோணி.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் டோணி இதுவரை 9442 ரன்கள் விளாசியுள்ளார்.. இந்த பட்டியலில் 13,341 ரன்கள் உதவியுடன் இலங்கை முன்னாள் வீரர் சங்ககரா முதலிடத்தில் இருக்கிறார்.