நான் ஐ.பி.எல் தொடரில் புறக்கணிக்கப்படுவதற்கு இது தான் காரணம்; புஜாரா விளக்கம்
டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே தான் சரியான வீரர் என்ற பெயராகி விட்டதால் தான் ஐ.பி.எல் தொடரில் தான் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக புஜாரா தெரிவித்துள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தொடரின் 11வது சீசன் வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்க உள்ளது.
சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் தொடரில் இருந்து தடை செய்யப்பட்ட சென்னை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தனது இரண்டாண்டு தடை காலம் முடிந்து மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்க உள்ளதால் மற்ற தொடர்களை விட இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலத்தில் சமீபத்தில் நடைபெற்றது.
இதில் ஓவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை கோடிகளை குவித்து எடுத்து கொண்டது. ஆனால், இந்திய டெஸ்ட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழந்து வரும் சீனியர் வீரர் புஜாராவை இந்த தொடரிலும் எந்த அணியும் விலை கொடுத்து வாங்கவில்லை.
இந்நிலையில் ஐ.பி.எல் தொடரில் தான் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதற்கு, நான் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே சரியானவன் என்ற பொதுவான எண்ணமே காரணம் என்று புஜாரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து புஜாரா பேசியதாவது “பொதுவான எண்ணமே லிமிடெட் ஓவர் போட்டிகளில் நான் இடம்பெற முடியாமல் போனதற்கு காரணம், ஆனால் ஒருநாள் மற்றும் டி.20 போட்டிகளில் எனக்கான காலம் இன்னும் முடிந்து விட வில்லை. விரைவில் இதில் இருந்து மீண்டு வந்து, இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க முயற்சி செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய ஒருநாள் மற்றும் டி.20 போட்டிகளில் ஜடேஜா மற்றும் அஸ்வின் தொடர்ந்து புறக்கணிப்பட்டு வருவது குறித்து பேசிய புஜாரா, அஸ்வினும், ஜடேஜாவும் டெஸ்ட் போட்டிகளில் மிக சிறந்த வீரர்கள், ஆனால் சாஹல் மற்றும் குல்தீப் யாதவின் வருகையில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சாஹல் மற்றும் குல்தீப் தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு வந்தாலும், தங்களது பவுலிங் திறமையை ஒவ்வொரு போட்டியிலும் முன்னேற்றி கொண்டே இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.