தொடர்ந்து விளையாடி கொண்டே இருப்பதால், மீண்டும் புத்துணர்ச்சி பெற இந்திய அணி வீரர்களுக்கு நேரம் இல்லை. இதனால்,இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய வீரர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்களுக்கு சிறிது ஓய்வு கொடுக்கவேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கையிட்டார்.
கடைசியாக சொந்த மண்ணில் 13 டெஸ்ட், 8 ஒருநாள், 3 டி20 போட்டிகள் விளையாடியது முதல் வீரர்கள் மற்றும் ஊழியர்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளவில்லை. அதன் பிறகு இந்தியன் பிரீமியர் லீக், சாம்பியன்ஸ் டிராபி, வெஸ்ட் இண்டீஸ் தொடர், இலங்கை தொடர் என ஓய்வில்லாமல் விளையாடினார்கள். இதன் பிறகு, 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு வரவுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா தொடர் செப்டம்பர் 17 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வீடியோ மூலம் சாஸ்திரி கோரிக்கை வைத்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
“இந்த ஆண்டு சர்வதேச போட்டிகள் தொடர்ந்து விளையாடவுள்ளதால், இந்திய வீரர்களுக்கு ஓய்வு எடுக்க முடியவில்லை. அது மட்டும் இல்லாமல், பயணம் செய்வதிலே சோர்வு அடைகின்றனர். சிறிது ஓய்வு கொடுத்தால், அவர்கள் புத்துணர்ச்சி பெறுவார்கள். ஒவ்வொரு தொடருக்கும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஓய்வு கொடுப்பதை பாருங்கள், அவர்களை போலவே நாமலும் செய்யவேண்டும்,” என பிசிசிஐ கூறியது.
ஆஸ்திரேலியா தொடர் முடிந்ததும் மீண்டும் இந்திய அணி பெரிய பெரிய தொடர்களில் விளையாடவுள்ளது. ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் ஒருநாள் மற்றும் டி20 தொடர் முடிந்து, நான்கு நாட்களில் நியூஸிலாந்து அணியுடன் விளையாடவுள்ளது. அதன் பிறகு, நவம்பர் மாதம் இந்தியாவிற்கு வருகிறது இலங்கை. இந்த தொடர் முடிந்தவுடன், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட தென்னாப்ரிக்காவுக்கு செல்கிறது இந்தியா.