கொழும்பில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் அஸ்வினின் அபார பந்து வீச்சில் சிக்கி இலங்கை சிதறுண்டு போனது. தனது முதல் இன்னிங்ஸை அது 183 ரன்களுக்கு இழந்தது. இதன் மூலம் இந்தியா 439 ரன்கள் லீடு பெற்றுள்ளது. தற்போது பாலோ ஆன் பெற்றுள்ளது இலங்கை.
2வது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இந்திய வீரர் அஸ்வின் 69 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்களையும், ஜடேஜா 2 விக்கெட்களையும் சாய்த்தனர். முகம்மது சமி 2 விக்கெட் வீழ்த்தினார்.
நிரோஷன் டிக்வெல்லா மட்டுமே சற்று சிறப்பாக ஆடி 48 பந்துகளில் 51 ரன்களை எடுத்தார். அவரை சமி போல்ட் ஆக்கி வெளியேற்றினார்.
முன்னதாக இந்தியா தனது இன்னிங்ஸில் 662 ரன்களைக் குவித்திருந்தது நினைவிருக்கலாம். இந்தியத் தரப்பில் சட்டேஸ்வர் புஜாரா (133), அஜிங்கியா ரஹானே (132) ஜடேஜா (70), விருத்திமான் சாஹா (67), அஸ்வின் (54) ரன்கள் குவித்திருந்தனர்.
இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அஸ்வின் 5 விக்கெட் எடுத்ததன் மூலம், 26வது முறை 5-விக்கெட் எடுத்திருக்கிறார். இந்தியாவிற்காக அதிக முறை 5-விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியலில் சீனியர் வீரரான ஹர்பஜன் சிங்கை முந்தினார். இந்த பட்டியலில் முன்னாள் இந்திய கேப்டன் அனில் கும்ப்ளே தான் முதல் இடத்தில் இருக்கிறார்.