சஞ்சு சம்சனுக்கு ஆதரவாக கத்தார் கால்பந்து மைதானங்களில் பேனர்களை ஏந்தி சென்றுள்ளனர் இந்திய ரசிகர்கள்.
சஞ்சு சாம்சன் இந்திய அணியின் உள்ளே வருவதும் வெளியே போவதுமாக இருந்து வருகிறார். அவரது பேட்டிங் மோசமாக இருந்தால், அந்த தேர்வு சரி என்று கூறலாம். ஆனால் நன்றாக விளையாடியும் அவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது.
சாம்சன் தொடரில் இருந்தாலும் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் பெயரளவில் விளையாடு வைக்கப்பட்டு வெளியில் அமர்த்தப்பட்டு விடுகிறார்.
ஆசிய கோப்பைக்கு முன்பு வரை டி20 அணியில் இருந்தார். ஆனால் ஆசியக் கோப்பையில் இடம் கொடுக்கப்படவில்லை. அதன்பிறகு டி20 உலக கோப்பையிலும் இடம் கொடுக்கப்படவில்லை.
தற்போது நியூசிலாந்து டி20 தொடரில் இடம் கொடுக்கப்பட்டது. ஆனால் விளையாட வைக்கப்படவில்லை. ஒருநாள் தொடரில் முதல் ஒரு நாள் விளையாடி 36 பந்துகளில் 38 ரன்கள் அடித்தார். ஆனால் இரண்டாவது போட்டியில் வெளியில் அமர்த்தபட்டார்.
இது எந்த வகையில் நியாயம் என்று பலரும் சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பினர். இதற்கு சிகர் தவான் பதில் கூறியதாவது: “ஆறாவது பந்துவீச்சாளர் இந்திய அணிக்கு நிச்சயம் தேவை. ஆகையால் தீபக் ஹூடாவை சஞ்சு சாம்சனுக்கு பதிலாக எடுத்தோம். இதில் எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை.” என்றார்.
ஆனாலும் ரசிகர்கள் திருப்தி அடையவில்லை. நன்றாக விளையாடி வந்த ஒருவரை ஏன் வெளியில் அமர்த்த வேண்டும்? ரிஷப் பண்ட் மோசமாக விளையாடுகிறாரே அவரை வெளியில் அமர்த்தலாம் அல்லவா? சஞ்சு சம்சனுக்கு ஒரு நியாயம் ரிஷப் பன்ட்டிற்கு ஒரு நியாயமா? என்று கேள்விக்கணைகளை தொடுத்து வந்தனர்.
மேலும், இந்திய ரசிகர்கள் ஒருபடி மேலே சென்று கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் கால்பந்து உலக கோப்பை மைதானத்திற்கு உள்ளே சென்று சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக பேனர்களை காட்டியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் பலராலும் பகிரப்பட்டு கூடுதல் ஆதரவை பெற்றிருக்கிறது.
இந்த அழுத்தத்திற்கு பிசிசிஐ எந்த வகையில் பதில் சொல்லும்? மேலும் கேப்டன் தவான் எப்படி கையாள்வார்? என்பதை பொறுத்திருந்து காண்போம்.