கடைசி பாலில் ரன் அடித்து தன்னை காப்பாற்றியதற்காக அஸ்வினுக்கு நன்றி கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.
சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கடைசி ஓவர் வரை எடுத்துச் சென்று பரபரப்பாக வெற்றி பெற்றது. இந்தியா பேட்டிங் செய்து கொண்டிருக்கும் பொழுது கடைசி இரண்டு ஓவர்களில் 31 ரன்கள் தேவைப்பட்டது.
19வது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் விராட் கோலி அடித்து அணிக்கு மீண்டும் நம்பிக்கையை பெற்று தந்தார். இதனால் கடைசி ஓவரில் இந்தியா வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. சுழல் பந்துவீச்சாளர் என்பதால் நிச்சயமாக அடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் முதல் பந்தை எதிர்கொண்ட ஹர்திக் பாண்டியா அவுட் ஆனார்.
பின்னர் உள்ளே வந்த தினேஷ் கார்த்திக் சிங்கிள் எடுத்து விராட் கோலிக்கு ஸ்ட்ரைக் கொடுத்தார். அடுத்த பந்தில் விராட் கோலி சிக்ஸர் அடித்தார். ஆனால் அந்த பந்து நோபால் ஆனது. அதில் மூன்று ரன்கள் ஓடிவிட்டனர். கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு ரன்கள் தேவைப்பட்டது.
தினேஷ் கார்த்திக் ஐந்தாவது பந்தில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்து வெளியேறினார். கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்டபோது, சமயோசிதமாக யோசித்து அஸ்வின் பந்தை விட்டுவிட்டார். அந்த பந்து வைட் ஆனது. ஒரு பந்தில் ஒரு ரன்கள் தேவைப்பட்டபொழுது அழகாக மிட்-ஆப் திசையில் தூக்கி அடித்து அணிக்கு வெற்றியை பெற்று தந்தார்.
அந்த கடைசி பந்தில் அஸ்வின் ரன் அடிக்கவில்லை என்றால், மொத்த பலியும் தினேஷ் கார்த்திக் மேலே விழுந்திருக்கும் என்று பலரும் கூறி வந்தனர். இதை தினேஷ் கார்த்திக் ஒப்புக்கொண்டு பிசிசிஐ வெளியிட்ட வீடியோ பதிவில் ‘நன்றி அஸ்வின்’ என கூறியுள்ளார். அதற்கு பதில் அளித்த அஸ்வின், ‘நம்ம ஏதாவது கருத்தா பேசலாமே’ என்று தமிழில் கூறியது கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து அணியை சிக்னி மைதானத்தில் எதிர்கொள்கிறது இந்திய அணி. இதற்காக வீரர்கள் சிட்னி மைதானத்திற்கு வந்து இறங்கினர். அப்போதுதான் இந்த வீடியோ பதிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வீடியோ: