“இந்தியாவின் முன்னாள் கேப்டன் டோணி மிகவும் அமைதியானவர். அவரின் அறைக்கதவுகள் அதிகாலை 3 மணிக்குக்கூட திறந்தே இருக்கும். சக வீரர்கள் அப்போதும் அவருடன் ஒரு கப் காஃபி குடித்துக்கொண்டே அணி முன்னேற்றம் குறித்து ஆலோசனை செய்யலாம்” நெகிழ்ந்து பேசுகிறார் ஆல்ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ்.
சென்னை சூப்பர் கிங்கிசின் தொடக்க கால வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் . டோணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கலக்கியவர். தமிழகத்திலும் தனக்கென ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக்கொண்ட நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர்.
தற்போது ஸ்டைரிஸ் தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரில், வர்ணனையாளராக பணியாற்றி ரசிகர்களுக்கு உற்சாகத்தை வழங்கிவருகிறார். இந்நிலையில், தனது சென்னை சூப்பர் கிங்ஸ் அனுபவங்களை ஊடகங்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளார். டோணி பற்றி அவர் நெகிழ்ந்து புகழ்ந்து தள்ளிவிட்டார்.
ஸ்டைரிஸ் கூறுகையில் ‘எனக்கு பிடித்த கேப்டன்களில் டோணியும், ஸ்டீபன் பிளம்மிங்கும் அடங்குவார்கள். கேப்டன் பதவியில் இருவரும் மாறுபட்ட வகையில் செயல்படுவார்கள்.
பிளம்மிங் மிகவும் புத்திசாலி. அவர் சொல்வதை கட்டாயம் நாம் செய்தாக வேண்டும். டோணி மிகவும் அமைதியான கேப்டன். ஆனால், இளம் வீரர்களின் கருத்தைக்கூட அவர் கேட்டறிவார்.
இது எனக்கு ரொம்பப் பிடித்த விஷயம். நீங்கள் ஐந்து போட்டிகளில் மட்டுமே விளையாடிய நபராக இருந்தாலும், 19 வயதிற்குட்பட்ட வயதில் இருந்தாலும், ஒவ்வொருவரின் கருத்தையும் டோணி கேட்டறிவார்.
அப்படித்தான் ஒரு சமயம் நாங்கள் ஐ.பி.எல். தொடரில் விளையாடிய போது, நடைபெற்ற ஒரு சம்பவத்தை உங்களிடம் ஷேர் பண்ணிக்கிறேன். கேப்டன் டோணியின் அறை அதிகாலை 3 மணி வரைக்கும் திறந்திருக்கும். யாராக இருந்தாலும் அவருடன் ஒரு கப் காஃபி குடித்துக்கொண்டு கருத்துக்களை பேசி கலந்துரையாடலாம்.’ என்கிறார்.