ஹர்திக் பாண்டியா, ரகானே ஆகியோரை முன்னாள் கேப்டன் கங்குலி பாராட்டியுள்ளார்.
இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி ஒருநாள், டி-20 தொடர்களில் பங்கேற்றது. ஒருநாள் தொடரை இந்திய அணி வென்றது. ஆனால் டி-20 தொடர் ஐதராபாத் மைதானத்தின் மோசமான பராமரிப்பு காரணமாக சமனில் முடிந்தது.
இத்தொடரில் கேப்டன் கோலி பெரிய அளவில் சாதிக்காவிட்டாலும், இந்திய வீரர்களான ஹர்திக் பாண்டியா, ரகானே ஆகியோர் அணியின் தேவையின் போது தோள் கொடுத்தனர். இவர்களை முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து கங்குலி கூறுகையில்,’ ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரின் போது ஒரு சில விஷயங்களை தவிர, இந்திய அணி ஒட்டுமொத்தமாக ஆதிக்கம் செலுத்தியது. குறிப்பாக பாண்டியாவின் திறமை இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய பலம். அவர் பந்தை சிக்சருக்கும் அனுப்பும் விதம், எதிரிகளை நடுங்கவைக்கிறது. இதை ஆட்டத்தை தொடர்ந்தால், விரைவில் தோனி இடத்தை பாண்டியா பிடித்துவிடுவார். ரகானே தொடர்ந்து சிறப்பான துவக்கம் அளித்தது சிறப்பான விஷயம். இவர்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்திய அணிக்காக இப்படியே செயல்படுவது மிகவும் அவசியம்.’ என்றார்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியுடன் ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் முடிந்த நிலையில் அக்டோபர் 22ஆம் தேதி முதல் நியூஸிலாந்து அணியுடன் இந்திய அணி விளையாடவுள்ளது. முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்குகிறது. அதன் பிறகு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடக்கவுள்ளது.