இனியும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் டி20 அணியில் இருக்க வேண்டுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார் ராகுல் டிராவிட்.
உலகக்கோப்பை டி20 தொடரில் இருந்து இந்திய அணி செமி-பைனல் சுற்றோடு வெளியேறியுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். தோல்விக்கு முழு முக்கிய பொறுப்பு ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இருவரின் மீதும் விழுந்திருக்கிறது. மேலும் ஒட்டுமொத்தமாக இந்திய அணி பீல்டிங்கில் மிகவும் சொதப்பலாக செயல்பட்டதும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
ஆசிய கோப்பை தொடர் வரை விராட் கோலியின் பேட்டிங் மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்த நிலையில், அதை அப்படியே அடுத்த இரண்டு மாதங்களில் மாற்றி எழுதியிருக்கிறார். இந்த உலககோப்பையில் ஆறு போட்டியில் விளையாடிய 296 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவரது சராசரி கிட்டத்தட்ட 99 ஆகும். இவரைபோல் போல் சூர்யாகுமார் யாதவ் 6 போட்டிகளில் 239 ரன்கள் அடித்து 57 ரன்கள் சராசரியாக வைத்திருக்கிறார்.
இவர்கள் இருவரை மட்டுமே நம்பி இந்திய அணி பேட்டிங், இந்த தொடர் முழுவதும் இருந்து விட்டது. துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் இருவரும் மிகவும் சொதப்பலாக செயல்பட்டனர்.
சர்மாவிற்கு தற்போது 35 வயதாகிறது. விராட் கோலிக்கு 34 வயதாகிறது. 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பைக்குள் இவர்களுக்கு 37 மற்றும் 36 வயதாகும். அப்போது இவர்கள் இருவரும் இந்திய அணியில் இருப்பார்களா? இவர்களின் எதிர்காலம் டி20 போட்டிகளில் எப்படி இருக்கிறது? என்கிற கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார் ராகுல் டிராவிட்.
இது குறித்து அவர் பேட்டி அளிக்கையில், “விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் எதிர்காலம் பற்றி தற்போது கூறுவது சரியாக இருக்காது. அதுவும் செமி-பைனல் போட்டியின் தோல்விக்கு பிறகு இதை நான் கூறுவது அவர்கள் மனதை இன்னும் பாதிக்கலாம். இருவரும் மிகச் சிறப்பான வீரர்கள் என்பது உலகம் அறியும்.
ஒரு சில போட்டிகளில் வீரர்கள் தவறு செய்கிறார்கள என்பதற்காக ஒட்டுமொத்தமாக ஒதுக்கி வைக்க முடியாது. நமக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
அதற்கு முன் ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பை இருக்கிறது. அதுக்கு தயாராக வேண்டிய தேவை இருக்கிறது. ஆகையால் இந்த தொடரிலேயே தேங்கியிருக்காமல் அடுத்தடுத்த தொடர்களுக்கு தயாராக முயற்சிப்போம்.” என்றார்