ஹாரிஸ் ரவூப் வேகத்திற்கு முன்னர் இந்தியாவின் உம்ரான் மாலிக் ஒன்றுமே கிடையாது என பேசியுள்ளார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஆகிப் ஜவத்.
சமகாலத்தில் இந்திய அணியின் அதிவேகப்பந்துவீச்சாளராக பார்க்கப்பட்டு வருபவர் இளம் உம்ரான் மாலிக். தனது வேகப்பந்துவீச்சின் மூலம் பேட்ஸ்மேன்களை முடிந்த அளவிற்கு திணறடித்து வருகிறார். அதேநேரம் ரன்களையும் வாரிக்கொடுத்து வருகிறார்.
உம்ரான் மாலிக் இளம் வீரராக இருக்கிறார். ஆகையால் இந்த தவறினை சரி செய்துகொள்ள முடியும் எனவும் கூறப்பட்டு வருகிறது.
இதுவரை 6 டி20 போட்டிகள் மற்றும் 7 ஒருநாள் போட்டிகளில் உம்ரான் மாலிக் விளையாடி உள்ளார். அதில் மூன்று முறை மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி மொத்தம் 21 விக்கெட்டுகளை தன் வசம் வைத்திருக்கிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரில் 156 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசினார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வீரர் வீசிய அதிவேகப்பந்துவீச்சு இதுதான். விரைவில் பாகிஸ்தான் அணியின் லெஜெண்ட் சோயிப் அக்தர் வீசிய 161 கிலோமீட்டர் சாதனையை முறியடிப்பார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறத.
பாகிஸ்தான் அணிலும் 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடிய ஹாரிஸ் ரவூப் இருக்கிறார். ஆசியகோப்பை, டி20 உலககோப்பை ஆகிய இரண்டிலும் பாகிஸ்தான் அணிக்கு தனது வேகத்தின் மூலம் கலக்கினார். உம்ரான் மாலிக் மற்றும் ஹாரிஸ் ரவூப் இருவரும் பயங்கரமான பந்துவீச்சாளர்களாக ஒப்பிட்டு பேசப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆகிப் ஜவத், இவர்கள் இருவரையும் ஒப்பிட்டு பேசுவது முறையானது அல்ல, ஹாரிஸ் ரவூப் தான் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் என பேசியுள்ளார். அவர் கூறியதாவது:
“உம்ரான் மாலிக் இடம் சில குறைகள் இருக்கிறது. துவக்கத்தில் சில ஓவர்கள் 150 பிளஸ் கிலோமீட்டர் வேகத்தில் வீசுகிறார். ஆனால் இந்த வேகத்தை அவரால் கடைசி வரை எடுத்துச் செல்ல முடியவில்லை. ஆட்டத்தின் ஏழாவது எட்டாவது ஓவர்களில் அவரது வேகம் குறைந்து விடுகிறது. அந்த சமயத்தில் 138 கிலோமீட்டர் வேகத்தில் தான் வீசுகிறார்.
ஹாரிஸ் ராவூப் அப்படிப்பட்டவர் அல்ல. போட்டியின் முதல் ஓவரிலிருந்து கடைசி ஓவர் வரை 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடியவர். இவர்கள் இருவரையும் ஒப்பிட்டு பேசுவது விராட் கோலியை மற்ற பேட்ஸ்மேன்களுடன் ஒப்பிட்டு பேசுவது போல இருக்கிறது. அது எப்படி சரியானதாக இருக்க முடியும்.” என ஆகிப் ஜாவத் பேசியுள்ளார்.