முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், மும்பை நகரின் இருசக்கர ஓட்டுநர்களுக்கு தலைகவசம் அணிவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் அந்த விழிப்புணர்வை தனது கார் சன்னலின் வழியாக இருசக்கர ஓட்டுநர்களுடன் பேசி ஏற்படுத்தி வருகிறார்.
இருப்பினும் அவர் பரபரப்பான சாலையில், தனது காரிலிருந்து இறங்கி, அங்கு கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி, இந்த நிகழ்வு மிகவும் வைரலாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
சச்சின் சில பந்துகளை அந்த இளைஞர் கூட்டத்தின் நடுவே அடிக்கிறார். இருப்பினும் அங்கு இருந்த இளைஞர்களின் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் அந்த வீடியோவின் சிறப்பாகும். பலர் சச்சினுடன் கை குலுக்கியும், செல்பி எடுத்தும் சென்றனர்.
Going Viral: Master blaster @sachin_rt gets off his car to play street cricket. pic.twitter.com/BqjTvc5XMr
— Mumbai Mirror (@MumbaiMirror) April 17, 2018
இந்த வீடியோ வைரல் ஆன பிறகு பலர் அதன் முழு வீடியோவையும் பதிவேற்றி வருகின்றனர். இருப்பினும் இந்த மாதிரியான தெரு கிரிக்கெட் மூலமாக தான் சச்சின் கிரிக்கெட் கிரவுண்டுக்குள் நுழைந்தார். தனது ஆரம்ப காலங்களில் அவர், கிரிக்கெட் கிரவுண்டிற்கு வெளியே தான் அதிக கிரிக்கெட்டுகளை விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சச்சின் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்துள்ளார்
சச்சின் டெண்டுல்கர் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார். நடப்பு சாம்பியனான அந்த அணி தற்போது தொடர்ந்து மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இன்று (ஏப்ரல்17) நடைபெறும் போட்டியில் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது.
சச்சின், ஐ.பி.எல். போட்டிகளில் மும்பை அணியின் சார்பாகவே விளையாடியுள்ளார். 78 போட்டிகளில் 2,334 ரன்களை குவித்துள்ளார், அதன் சராசரி 34.83 மற்றும் ஸ்டிரைக் ரேட் 119.81 ஆகவும் உள்ளது. சச்சின் 2010இல் 15 போட்டிகளில் மொத்தம் 615 ரன்களை குவித்து ஆரஞ்சு கேப்பை வென்றுள்ளார்.