இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இணையாக இருந்தது என்று பேசியுள்ளார் ஆஸ்திரேலியா அணி வீரர் மிச்சல் மார்ஸ்.
டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்று நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியை காண்பதற்கு மைதானத்திற்கு 90 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் வந்திருந்தனர். உலகமே கொண்டாடும் கிரிக்கெட் போட்டியாக அது இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு போட்டியிலும் விறுவிறுப்பிற்கு பஞ்சமே இல்லாமல் நடந்து முடிந்தது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் அடித்திருந்தனர். அடுத்ததாக பேட்டிங் செய்த இந்திய அணியால் இலக்கை எளிதாக எட்டிவிட முடியவில்லை. பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து இந்தியாவிற்கு சிக்கலை ஏற்படுத்தி வந்தனர்.
ஆனாலும் அனுபவம் மிக்க விராட் கோலி மற்றும் அவருக்கு பக்கபலமாக இருந்த ஹர்திக் பாண்டியா இருவரும் விட்டுக் கொடுக்காமல் இறுதிவரை போராடினர். போட்டியின் கடைசி பந்து வரை சீட்டின் நுனியில் அமர்ந்து ரசிகர்கள் பார்க்கும் அளவிற்கு பரபரப்பை பெற்று இருந்தது. இறுதியில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்படி பலரும் வெகுவாக பாராட்டியபடி, இப்படியொரு போட்டியை என் கிரிக்கெட் வாழ்வில் கண்டதில்லை என்று கூறும் அளவிற்கு அபாரமாக இருந்தது. அந்த வரிசையில் ஆஸ்திரேலியா வீரர் மிச்சல் மார்ஸ் இந்த போட்டியுடன் உலக கோப்பை முடித்துக் கொள்ளலாம் என்று கூறி பாராட்டுதலை வெளிப்படுத்தினார்.
“இந்த போட்டியுடன் தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பையை நிறுத்தி விடலாம் என்று நினைக்கிறேன். அந்த அளவிற்கு சிறப்பாக அமைந்திருந்தது. இந்த மூன்று வாரங்களில் இப்படி ஒரு போட்டியை நான் காணவில்லை. இனியும் இருக்குமா என்று தெரியவில்லை.
இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே எப்போதும் பார்ப்பதற்கு ஆர்வமாக இருக்கும். இந்த மைதானத்தில் இருக்கும் ரசிகர்களில் ஒருவராக நானும் இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அவ்வளவு சிறப்பாக இருந்தது. பேசுவதற்கு வார்த்தைகளை இல்லை.” என்றார்.
மேலும் விராட் கோலியின் பேட்டிங் பற்றி பேசிய அவர், “கடந்த 12 மாதங்களாக விராட் கோலி மிகவும் வித்தியாசமான வீரராக விளையாடி வருகிறார். உலகக் கோப்பையின் துவக்க போட்டியில் இப்படி ஒரு முத்திரையை அவர் பதித்திருக்கிறார். வருகிற போட்டியிலும் இதே போல் ஆடுவார் என்று எதிர்பார்க்கிறேன்.” என்றார்.