2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை வரை விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் டீமில் இருக்க வாய்ப்பு இருக்கிறதா? என்று தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா கருத்து தெரிவித்திருக்கிறார்.
டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. ரோகித் சர்மா அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அதேபோல் இந்திய அணிக்கு பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கும் விதமாக செயல்படுபவர் விராட் கோலி.
முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் விராட் கோலி. தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியின் போது துரதிஷ்டவசமாக இந்திய அணி தோல்வியை தழுவியது.
இருப்பினும் சூப்பர் 12 சுற்றில் இந்தியாவிற்கு இன்னும் இரண்டு போட்டிகள் இருப்பதால் இரண்டையும் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இதற்கிடையில், 2023 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் பற்றிய பேச்சுக்களே இன்னும் துவங்காத நிலையில், 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இருப்பார்களா? அவரது வயது காரணமாக அணியில் இருந்து வெளியேற்றப்படுவார்களா? என்று பல்வேறு கேள்விகளை இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மாவிடம் பத்திரிகையாளர்கள் எழுப்பினர்.
அதற்கு சேத்தன் சர்மா லாவகமாக பதில் அளித்திருக்கிறார்.
“தற்போது டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. தொடரின் நடுவே வீரர்களை பற்றி நான் பேசக்கூடாது. இது அவர்களை மனதளவில் பாதிக்கலாம். ஆகையால் தற்போது எதுவாக இருந்தாலும் வீரர்களை பற்றி கூறுவது மிகவும் தவறு.
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா வீரர் போன்ற வீரர்கள் அணியில் மிகுந்த அனுபவமிக்க வீரர்களாக இருக்கின்றனர். இவர்களிடம் இளம் வீரர்கள் நிறைய கற்றுக் கொள்வார்கள். அவர்கள் அணியில் இருந்தால் இளம் வீரர்களுக்கு கூடுதல் பலமாக இருக்கும்.” என்றார்.
மேலும் இவர்கள் அடுத்த உலக கோப்பைக்கு இந்திய அணியில் இருப்பார்களா? என்பது பற்றி கேட்டதற்கு, “விளையாட்டு வீரருக்கு எப்போதும் அணியில் கதவுகள் திறந்து இருக்கும். வீரர்களுக்கு வயது ஒரு காரணமே இல்லை. தொடர்ச்சியாக அணிக்கு நன்றாக செயல்பட்டு ரன்களை அடித்து வரும் பட்சத்தில், நிச்சயம் இருவரும் அணியில் இருப்பர். அது அந்த காலகட்டத்தை பொறுத்து தான் பேச முடியும். தற்போது எதுவும் கூற இயலாது.” என்று பதில் அளித்தார்.