ஹர்திக் பாண்டியா தனது கிரிக்கெட் ஆட்ட முறையை மாற்றியுள்ளார் என்று இந்தியா ‘ஏ’ அணி பயிற்சியாளர் டிராவிட் கூறியுள்ளார்.
இந்திய அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக ஹர்திக் பாண்டியா திகழ்ந்து வருகிறார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அடிலெய்டில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் சர்வதேச போட்டியில் களம் இறங்கினார்.
பந்து வீச்சு, பீல்டிங் மற்றும் பேட்டிங்கில் சிறந்து விளங்கிய ஹர்திக் பாண்டியா மீது அனைவருடைய பார்வையும் விழுந்தது. அதற்கேற்ப ஹர்திக் பாண்டியா தனது ஆட்டத்தை வலுப்படுத்திக் கொண்டே வந்தார். இதனால் இந்திய அணியில் நிரந்தர இடம்பிடிக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளார்.
இந்திய ‘ஏ’ அணியில் விளையாடியபோது ராகுல் டிராவிட் ஹர்திக் பாண்டியாவிற்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் வெற்றியை நிர்ணயிக்கக் கூடிய வீரராக வருவார் என்றும் கூறினார். அந்த சொல் தற்போது நிறைவேறி வருகிறது.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியா தனது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியிருப்பதாக ராகுல் டிராவிட் கூறியுள்ளார். இதுகுறித்து டிராவிட் கூறுகையில் ‘‘ஹர்திக் பாண்டியாவை குறித்த சிறந்த எடுத்துக்காட்டு என்னவெனில், அவர் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் விளையாட தயாராகிக் கொண்டிருக்கிறார். அவருடன் நான் அடிக்கடி பேசியதில் அவர் இயற்கையான ஆட்டத்தை மட்டும் வெளிப்படுத்த வில்லை என்பது தெரிய வந்தது. அனைத்து பெருமைகளும் அவருக்குத்தான் சேரும். அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றிக்கொண்டுள்ளார்.
நான்காவது இடத்தில் அவர் களம் இறங்கியதும், அதற்கேற்றபடி ஒரு குறிப்பிட்ட வழியில் பேட்டிங் செய்தார். நாளைய போட்டியில் ஒருவேளை இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்த நிலையில் இருந்தால், டோனியுடன் இணைந்து முதல் போட்டியில் செய்ததை செய்வார். இது அவருடைய தேர்ந்த நிலையை காட்டுகிறது. அவர் தன்னுடைய இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார் என்ற கருத்து நிலவுகிறது. இது என்னை ஏமாற்றம் அடையச் செய்கிறது. ஏனென்றால், இயற்கையான ஆட்டம் என்பதை நான் ஏற்றுக் கொள்ளும் விஷயம் அங்கு இல்லை.
மாறுபட்ட சூழ்நிலையில் எப்படி விளையாடுகிறார் என்பதுதான் முக்கியம். அணியின் ஸ்கோர் 30 ரன்னுக்கு 3 விக்கெட் அல்லது 250 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலையில் அணி இருக்கும்போது நீங்கள் விளையாடும்போதுதான் சிறந்த வீரரா? முதல் ஓவரில் விளையாடுவது அல்லது மதிய உணவு இடைவேளைக்குப்பின் விளையாடுவது சிறந்ததா?. மாறுபட்ட சூழ்நிலையில் மாறுபட்ட இடங்களில் பேட்டிங் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும். தற்போது ஹர்திக் பாண்டியா அப்படி செய்து கொண்டிருக்கிறார்’’ என்றார்.