கொல்கத்தாவில் 2001-ல் நடைபெற்ற டெஸ்டில் பாலோ-ஆன் ஆன இந்தியா, அந்த போட்டியில் அபார வெற்றி பெற்றதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
2001-ம் ஆண்டு மார்ச் மாதம் 11-ந்தேதியில் இருந்து 15-ந்தேதி வரை நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் வாக் பேட்டிங் தேர்வு செய்தார். ஹெய்டன் (97), ஜஸ்டின் லாங்கர் (58), ஸ்டீவ் வாக் (110) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 171 ரன்களில் சுருண்டது. லஷ்மண் மட்டும் அதிகபட்சமாக 59 ரன்கள் சேர்த்தார்.
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை விட இந்தியா 274 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்ததால், ஸ்டீவ் வாக் பாலோ-ஆன் தேர்வு செய்தார். அதன்படி இந்தியா 2-வது இன்னிங்சை தொடர்ந்தது.
தொடக்க வீரர்கள் ரமேஷ் (30), தாஸ் (39), தெண்டுல்கர் (10), கங்குலி (48) அவுட்டான பின்னர் லஷ்மண் உடன் டிராவிட் ஜோடி சேர்ந்தார். டிராவிட் களம் இறங்கும் முன் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் சேர்த்திருந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த லஷ்மண் – டிராவிட் ஆஸ்தரேலியாவின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். 9 பேர் பந்து வீசியும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
லஷ்மண் 281 ரன்னும், டிராவிட் 180 ரன்னும் குவித்தனர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 376 ரன்கள் குவித்தது. 178 ஓவர்கள் விளையாடிய இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 657 ரன்கள் குவித்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
ஆஸ்திரேலியாவை விட 383 ரன்கள் அதிகம் பெற்றது. 384 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஹர்பஜன் சிங்கின் அபார பந்து வீச்சால் ஆஸ்திரேலியா 212 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாலோ-ஆன் தேர்வு செய்து தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாக் மிகுந்த வருத்தம் அடைந்தார். அத்துடன் இந்தியாவில் விளையாடும்போது பாலோ-ஆன் தேர்வு செய்யமாட்டேன் என்று தெரிவித்தார்.
அதே நிலைமை தற்போது கொழும்பு டெஸ்டில் இந்தியாவிற்கு ஏற்படுமோ என்ற நிலை உருவாகும்போல் தெரிகிறது.
கொழும்பு டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி 183 ரன்னில் சுருண்டது. இந்தியாவை விட இலங்கை அணி 439 ரன்கள் பின்தங்கியிருந்ததால் இந்தியா பாலோ-ஆன் கொடுத்தது.
இலங்கை அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக உபுல் தரங்கா, கருணாரத்னே ஆகியோர் களம் இறங்கினார்கள். தரங்கா 2 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது இலங்கை 7 ரன்கள் எடுத்திருந்தது.
2-வது விக்கெட்டுக்கு கருணாரத்னே உடன் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சிறப்பாக இருந்த போதிலும் அதை திறமையாக எதிர்கொண்டனர்.
இதனால் இலங்கையின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. சிறப்பாக விளையாடிய மெண்டிஸ் சதம் அடித்தார்.
ஒரு வழியாக இலங்கையின் ஸ்கோர் 198 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. மெண்டிஸ் 110 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அப்போது கருணாரத்னே 83 ரன்கள் எடுத்திருந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 191 ரன்கள் குவித்தது.
தற்போது இலங்கை இந்தியாவை விட 241 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை உள்ளது.
கருணாரத்னே, சண்டிமல், மேத்யூஸ் இணைந்து அதிக ஸ்கோர் அடித்தார், 2001-ல் கொல்கத்தாவில் பாலோ-ஆன் கொடுத்து ஏமாற்றம் அடைந்த ஆஸ்திரேலியாவின் நிலைமை இந்தியாவிற்கு ஏற்படுமோ என்ற நிலை உள்ளது.