தற்போது இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் கை ஓங்கி இருந்தது, ஆனால் போராடி சமனில் முடித்தது இலங்கை அணி. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் இந்தியா- இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் அடித்து அசத்த, முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை அசால்ட்டாக பறித்தார் கேப்டன் கோலி.
இந்த டெஸ்டில் இலங்கை டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அஸ்வின் (4), இசாந்த் சர்மா (3), ஜடேஜா ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் இலங்கை முதல் இன்னிங்சில் 205 ரன்னில் சுருண்டது.
பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லோகேஷ் ராகுல் 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
சதம் அடித்த பிறகு முரளி விஜய் அவுட் ஆக, புஜாராவுடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் கோலி. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் புஜாரா சதம் அடிக்க, கோலி சதம் அடித்து களத்தில் இருந்தார்கள். மூன்றாவது நாள் தொடக்கத்தில் தனது 5வது டெஸ்ட் இரட்டை சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார் கேப்டன் விராட் கோலி.
தோனியை முந்திய விராட் கோலி :
இது வரை இந்திய அணிக்காக 319 போட்டிகளில் விளையாடி உள்ள கேப்டன் விராட் கோலி, சர்வதேச போட்டிகளில் 15961 ரன் அடித்திருக்கிறார். அதில் 51 சதம் அடங்கும் என்பது அனைவருக்குமே தெரியும். இந்நிலையில் இந்திய அணிக்காக அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் முன்னாள் கேப்டன் தோனியை முந்தினார் விராட் கோலி.
479 போட்டிகளில் விளையாடியுள்ள மகேந்திர சிங் தோனி 15809 ரன் அடித்திருக்கிறார். சர்வதேச போட்டிகளில் அதிக ரன் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார் விராட் கோலி. அவருக்கு முன்பு விரேந்தர் சேவாக் (16892 ரன்), சவுரவ் கங்குலி (18433 ரன்), ராகுல் டிராவிட் (24064 ரன்), சச்சின் டெண்டுல்கர் (34357 ரன்) ஆகியோர் உள்ளார்கள்.