இந்திய அணியின் வளர்ந்து வரும் சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் உள்ளார். அஸ்வின், ஜடேஜா அணியில் இல்லாத நேரத்தில் இவருக்குதான் முன்னுரிமை. இலங்கைக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடாத குல்தீப் யாதவ், கடைசி டெஸ்டில் விளையாடினார். அதேபோல் கடைசி இரண்டு மற்றும் டி20 போட்டியில் விளையாடினார்.
போட்டியின்போது இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பந்து வீச்சாளர்களுக்கு அதிக அளவில் சுதந்திரம் வழங்குவார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தொடர் குறித்து குல்தீப் யாதவ் கூறுகையில் ‘‘விராட் கோலி ஒரு தலைவர். மைதானத்தில் நீங்கள் விரும்பும் எல்லா செயல்களுக்கும் அனுமதி வழங்குவார். நான் பந்து வீசும்போது, அவர் என் அருகில் வந்து, நீங்கள் எப்படி பீல்டிங் அமைக்க விரும்புகிறீர்கள் என்று கேட்பார். பந்து வீச்சாளர் என்ன கேட்கிறார்களோ, அதை செய்து கொடுக்கும் வகையில் சுதந்திரம் கொடுப்பார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அளவில் எனக்கு ஆதரவாக இருந்தார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் அதேபோல்தான். அணி வீரர்கள் மற்றும் கேப்டனோடு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்.
பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் முன்னின்று எங்களை வழி நடத்துவார். எங்கு பீல்டிங் செய்தாலும், அந்த இடத்திற்கு ஏற்றவாறு திறமையாக செயல்படுவார். ஆடுகளத்தில் அல்லது வலைப்பயிற்சியில் தனக்குத்தானே உந்துசக்தியாக விளங்குவார்.
உங்களுடைய பீல்டிங் திறமையை வளர்க்க வேண்டுமென்றால், விராட் கோலியை பார்த்தாலே போதும். ஒரு சதவீதம் திறமை மேம்படும். இளம் வீரர்களிடம், அவர் என்ன விரும்புகிறார், அணியில் இருந்து நமக்கு என்ன தேவை என்பது குறித்து பேசுவார்.
தற்போதைய சூழ்நிலையில் எனக்கு மிகப்பெரிய அளவில் சவால் காத்துக் கொண்டிருக்கிறது. இருந்தாலும், என்னுடைய செயல்திறன் குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். கடைசி டெஸ்டில் இடம்பிடித்தேன். அதில் சிறப்பாக பந்து வீசினேன். கடைசி இரண்டு ஒருநாள் போட்டியில் இடம்பிடித்தேன். அதிலும் சிறப்பாக பணியாற்றினேன். டி20 போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டேன் என்று நினைக்கிறேன்.
ஒரு வீரராக எல்லா போட்டியிலும் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். இது நெருக்கடியான விளையாட்டு. வீரர்களை சுழற்சி முறையில் களம் இறக்குவதற்கு கேப்டன் மற்றும் பயிற்சியாளர் முடிவு செய்த பிறகு, ஒவ்வொரு வீரரும் தனது பங்களிப்பை அளிக்க வேண்டும். இந்த முறையால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நாம் கேப்டன் மற்றும் பயிற்சியாளரை பாராட்ட வேண்டும். ஏனென்றால், உலகக்கோப்பை வருவதால், ஒவ்வொருவரையும் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற விரும்புகிறார்கள்’’ என்றார்.