ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், ஹர்திக் பாண்டியாவின் அதிரடியும், தோனியின் அனுபவமும் கைகொடுக்க, இந்திய அணி, 50 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 281 ரன்கள் எடுத்தது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி, இன்று சென்னையில் துவங்கியது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
’டாப் – ஆர்டர்’ புஷ்:
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர் ரகானே (5), கோலி (0), பாண்டே (0) ஆகியோர் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். ரோகித் (28), ஜாதவ் (40) நீண்ட நேரம் தாக்கு பிடிக்கவில்லை.
பாண்டியா ‘கதகளி’:
இதன் பின் ஜோடி சேர்ந்த தோனி, பாண்டியா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. முதலில் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாண்டியா, போகப்போக கதகளி ஆடினார்.
தனது வழக்கமான ஸ்டைலில் ஹாட்ரிக் சிக்சர் விளாசிய பாண்டியா, அரைசதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்திய பாண்டியா, 83 ரன்கள் எடுத்த போது ஜம்பா சுழலில் சிக்கினார்.
பினிஷர் தோனி:
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனிக்கு புவனேஷ்வர் நல்ல கம்பெனி கொடுத்தார். தோனி ஒருநாள் அரங்கில் தனது 66வது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
தனது வழக்கமான பாணியில் தோனி (79) பினிஷிங் கொடுக்க, இந்திய அணி, 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 281 ரன்கள் எடுத்தது.
செஞ்சுரி ‘சிங்கம்’ தோனி:
முதல் ஒருநாள் போட்டியில், 79 ரன்கள் விளாசிய தோனி, ஒட்டுமொத்த சர்வதேச அரங்கில் தனது 100வது அரைசதத்தை (33 டெஸ்ட் + 66 ஒருநாள் + 1 டி-20) பூர்த்தி செய்து அசத்தினார்.
இதன் மூலம் இம்மைல்கல்லை எட்டிய நான்காவது இந்தியர் என்ற பெருமை பெற்றார் தோனி. முன்னதாக சச்சின் (164 அரைசதம்), டிராவிட் (146), கங்குலி (107) ஆகியோர் இம்மைல்கல்லை எட்டினர்.