2020-ம் ஆண்டு ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணிக்கு ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங்.
இரண்டு உலக கோப்பையை (2003, 2007) பெற்றுக் கொடுத்து பெருமை சேர்த்தவர். ஆஸ்திரேலிய அணியின் வெற்றி மற்றும் வரலாற்றுமிக்க கேப்டன் ஆவார்.
இந்த நிலையில் 2020-ம் ஆண்டு ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணிக்கு ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அவருடன் பேச்சு நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாண்டிங் ஏற்கனவே இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரில் உதவி பயிற்சியாளராக பணியாற்றி இருந்தார். பிப்ரவரி மாதம் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதும் 20 ஓவர் போட்டிக்கும் அவர் உதவி பயிற்சியாளராக பணியாற்றுகிறார்.

Photo by Deepak Malik / BCCI / SPORTZPICS
ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக இருக்கும் லீமேனின் ஒப்பந்தம் 2019-ம் ஆண்டு முடிகிறது. 20 ஓவர் அணிக்கு பாண்டிங் பயிற்சியாளராக நியமிப்பதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஆர்வத்துடன் இருக்கிறது.

2020-ம் ஆண்டுக்கான 20 ஓவர் உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. ஆஸ்திரேலிய அணி இதுவரை 20 ஓவர் உலக கோப்பையை வென்றது இல்லை. இதனால் பாண்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது. 20 ஓவர் உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணி 2010-ம் ஆண்டு 2-வது இடத்தை பிடித்து இருந்தது.