நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடர் மற்றும் இலங்கைக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை இன்று அறிவித்தார்கள். இந்திய அணியில் பல ஆச்சரியங்கள் உள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சிறப்பாக விளையாடிய முகமது சிராஜ் மற்றும் மும்பை அணியின் நட்சத்திர கிரிக்கெட்டர் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் நியூஸிலாந்துக்கு எதிரான டி20 அணியில் இடம் பிடித்துள்ளார்கள்.
செயலாளர் அமிதாப் சவுதாரி இந்திய அணியை அறிவித்த பிறகு, முகமது சிராஜ் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் ஐபில், உள்ளூர் போட்டிகள் மற்றும் ஜூனியர் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடியதால் தால் சீனியர் அணியில் இடம் பெற்றுள்ளார்கள் என அணி தேர்வாளர் எம்.ஸ்.கே பிரசாத் கூறினார்.
“டெஸ்ட், ஒருநாள், டி20 என எந்த விதமான போட்டியாக இருந்தாலும் ஷ்ரேயஸ் ஐயர் சிறப்பாக விளையாடுகிறார், இதனால் தான் அவரை தேர்வு செய்துள்ளோம். ஒருவரை நாங்கள் பிடித்துவிட்டால், அவரை தொடர்ந்து விளையாட வைப்போம். பாருங்கள் ஷ்ரேயஸ் ஐயர் சாதிக்க போகிறார். முகமது சிராஜும் சிறப்பாக விளையாடியதனால் தான் அவருக்கும் இடம் கிடைத்தது,” என பிரசாத் தெரிவித்தார்.
டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ரவிச்சந்திர அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மீண்டும் களமிறங்க உள்ளார்கள். மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவை அணியில் சேர்த்துள்ளார்கள். இலங்கை தொடருக்கு முன்பு காயம் காரணமாக விலகிய முரளி விஜய், மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பினார்.
முக்கிய டெஸ்ட் வீரர்கள் இஷாந்த் சர்மா, முகமது ஷமி, வ்ரிதிமான் சாஹா, செதேஸ்வர் புஜாரா ஆகியோரும் அணியில் உள்ளார்கள். ‘ரொட்டேஷன் பாலிசி’ கேப்டனுக்கும் உள்ளது என அணியின் தேர்வாளர் எம்.ஸ்.கே பிரசாத் கூறினார்.
இரண்டு தொடருக்கான அணியிலும் இடம் பெற்றிருக்கும் விராட் கோலி, இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் மற்றும் ஒருநாள், டி20 தொடரில் விளையாட மாட்டார் என தகவல்கள் வந்தன. அடுத்து தென்னாபிரிக்கா, இங்கிலாந்து போன்ற பெரிய அணியுடன் அவர்களின் சொந்த மண்ணிலே விளையாடவுள்ளதால், விராட் கோலி ஓய்வு எடுப்பார் என்று எதிர்பார்க்க படுகிறது.