
அதே நேரத்தில் கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, முன்னாள் கேப்டன் கவாஸ்கர், காம்பீர் ஆகியோர் டோனிக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். தன் மீதான விமர்சனம் குறித்து டோனி கூறும் போது எல்லோருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு. அதை மதிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் டோனிக்கு முன்னாள் கேப்டன் கபில்தேவ் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஒரு சில ஆட்டத்தை வைத்து டோனியை ஏன்? விமர்சனம் செய்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. வயது ஒரு பெரிய விஷயம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். திறமைதான் முக்கியம்.
2011-ல் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் தெண்டுல்கர் ஆடிய போது அவரது வயது 38 அப்போது தெண்டுல்கரை யாரும் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் இப்போது டோனியின் ஓய்வு குறித்து மட்டுமே பேசப்படுகிறது.
டோனியை அணியில் இருந்து நீக்க சொல்கிறார்கள். அப்படி செய்தால் அவருக்கு சரியான மாற்று வீரராக யாரை சேர்ப்பீர்கள். டோனியின் திறமை இந்திய அணிக்கு முக்கியம்.
ஹர்த்திக் பாண்டியாவிடம் திறமை இருக்கிறது. அவர் என்னைவிட சிறந்த ஆல்ரவுண்டராக வருவார். அவர் தனது இயல்பான ஆட்டத்தை தொடர வேண்டும்.
இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.
ஒரு நாள் போட்டிக்கான உலக கோப்பையை கபில்தேவும், டோனியும் பெற்றுக் கொடுத்து நாட்டுக்கு பெருமை சேர்த்தவர்கள். கபில்தேவ் தலைமையில் 1983-ம் ஆண்டு இந்தியா முதல் முறையாக உலக கோப்பையை வென்றது. அதன் பின்னர் 28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி 2011-ம் ஆண்டு உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.