இலங்கை அணி உடன் நடக்கும் ஒரு நாள் தொடருக்கு சஞ்சு சாம்சன்-ஐ எடுக்க வேண்டாம், கேஎல் ராகுலை எடுங்கள் என ரோகித் சர்மா வலியுறுத்தியதாக தேர்வுக்குழு தரப்பில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது.
ஜனவரி 3ஆம் தேதி துவங்கும் இலங்கை அணியுடனான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான தொடர் ஜனவரி 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜனவரி 3, 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் டி20 போட்டிகளும், 10, 12 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகளும் நடைபெற உள்ளது.
இந்த தொடர்களில் பங்கேற்கும் டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கு தனித்தனியாக அணிகள் அறிவிக்கப்பட்டன. டி20 போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு கேஎல் ராகுல், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற மூத்த வீரர்கள் அணியிலிருந்து நீக்கப்பட்டு இருக்கின்றனர். இது தற்காலிகமா? அல்லது நிரந்தரமா? என்பது குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் வெளியேற்றப்பட்டிருக்கிறார். அதேபோல் டி20 தொடரில் இடம் பெற்றுள்ள சஞ்சு சாம்சன்-க்கு ஒருநாள் தொடரில் கொடுக்கப்படவில்லை.
இந்த 2022ஆம் ஆண்டு 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 330 ரன்கள் அடித்திருக்கிறார். 105 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 66 சராசரியை வைத்திருக்கிறார். ஏன் இவருக்கு ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டது என்கிற விவாதங்கள் நடைபெறுகிறது.
ரோகித் சர்மா செய்த வேலை
சஞ்சு சாம்சன்-க்கு ஒருநாள் போட்டிகளில் இடம் கிடைக்காததற்கு ரோகித் சர்மா தான் காரணம் என்று பிசிசிஐ தேர்வுக்குழு அதிகாரிகளிடமிருந்து தகவல்கள் கசிந்துள்ளது. மோசமான பார்மில் உள்ள கேஎல் ராகுலுக்கு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இடம் கொடுக்கப்பட வேண்டாம் என்கிற முடிவில் தேர்வுக்குழு இருந்ததுள்ளது.
இந்நிலையில் சஞ்சு சாம்சன்-ஐ இரண்டு தொடர்களிலும் எடுக்கலாம் என்கிற முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் சஞ்சு சாம்சன்-க்கு பதிலாக கேஎல் ராகுலுக்கு ஒருநாள் தொடர்களில் வாய்ப்பு கொடுங்கள் என்று ரோகித் சர்மா தேர்வுக்குழுவினரை வலியுறுத்தி இருக்கிறார். இதைப் பற்றிய தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இதனால் ரோகித் சர்மா மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
டி20 உலககோப்பையில் கேஎல் ராகுல் மிக மோசமாக விளையாடினார். 6 போட்டிகளில் 140 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற வங்கதேச அணியுடனான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் மட்டுமே அரைசதம் அடித்தார். மீதம் இருந்த இரண்டு போட்டிகளிலும் சொற்பரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.
மோசமான பார்மில் இருப்பவருக்கு இரண்டு தொடர்களிலும் வாய்ப்பு கொடுக்க வேண்டாம் என இருந்தபோது, ரோகித் சர்மா தலையிட்டு இப்படி செய்தது எதற்காக என்கிற காரணங்கள் தற்போது வரை தெரியவில்லை. சொந்த விருப்பு வெறுப்புக்காகவா என ரோகித் சர்மா மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.