அஸ்வின் கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு இது தான் காரணம்; உண்மையை உடைத்த சேவாக்
அஸ்வினை விட சீனியர் மற்றும் திறமையான வீரரான யுவராஜ் சிங் அணிய்ல் இருக்கும் போது அஸ்வின் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கான காரணத்தை சேவாக் தெரிவித்துள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தொடரின் 11வது சீசன் வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்க உள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்றது
இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை கோடிகளை குவித்து எடுத்து கொண்டன.
ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு விதத்தில் பலம் பெற்று ஐ.பி.எல் தொடரில் சாதிக்க காத்துள்ள நிலையில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணி கேப்டனுக்கு பதவிக்கு சரியான ஆள் இல்லாமல் தவித்து வந்த நிலையில் பஞ்சாப் அணி இன்று தனது அணியின் கேப்டனாக அஸ்வினை நியமித்தது.
ஒருவழியாக பஞ்சாப் அணி கேப்டனை நியமித்து விட்டாலும், அஸ்வினை விட சீனியர் வீரரான யுவராஜ் சிங் அணியில் இருக்கும் போது அஸ்வின் கேப்டனாக நியமிக்கப்பட்டது ஏன் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் பஞ்சாப் அணியின் ஆலோசகரான சேவாக் இதற்கான காரணத்தை தனது முகநூல் பக்கம் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.
இது குறித்து சேவாக் கூறியதாவது “யுவராஜ் சிங் அணியில் இருக்கும் போது அஸ்வின் கேப்டனாக நியமிக்கப்பட்டது ஏன் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். தனிப்பட்ட முறையில் ஒரு அணியை வழிநடத்த பந்துவீச்சாளரே சிறந்தவர் என்று நினைப்பவன் நான், இதே போல் பஞ்சாப் அணியின் நிர்வாகிகள் பலரும் அஸ்வினுக்கு சாதமாகவே பேசினர்.
இது மட்டுமல்லாமல் நாங்கள் நீண்ட திட்டங்களை யோசித்து பார்த்தே இந்த முடிவை எடுத்துள்ளோம். இந்த தொடரில் அஸ்வின் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அவரே அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு பஞ்சாப் அணியின் கேப்டனாக இருப்பார். யுவராஜ் சிங் எனது சிறந்த நண்பர் தான் என்றாலும், ஒரு பொறுப்பு நம் மீது சுமத்தப்பட்டிருக்கும் போது அதில் நட்பை இணைக்க கூடாது, அஸ்வின் கேப்டன் பதவிக்கு முழு தகுதியானவர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.