முதல் போட்டியில் இந்திய அணியின் அடைந்த தோல்வி காரணமாக, இந்திய கேப்டன் கோஹ்லியால் எதிர்வரும் போட்டிகளில் ஆக்ரோஷமாக செயல்பட முடியாது என்று தென் ஆப்ரிக்கா அணி வீரர் பிலேண்டர் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் இரு அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் கடந்த 5ம் தேதி துவங்கியது.
இதில் வெறும் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்திய இந்திய அணி, தனது மோசமான பேட்டிங் காரணமாக 72 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இந்த போட்டியின் இந்திய அணியின் பொறுப்பற்ற பேட்ஸ்மேன்கள் மூலம் இந்திய அணி தனது சொந்த மண்ணில் தான் கெத்து என்றும் அந்நிய மண்ணில் இந்திய அணியால் தாக்குபிடிக்க முடியாது என்ற விமர்ச்சனத்திற்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக இந்திய அணியின் கேப்டனான விராத் கோஹ்லி, முதல் இன்னிங்ஸில் 5 ரன்னிலும், இரண்டாவது இன்னிங்ஸில் 28 ரன்களிலும் விக்கெட்டை இழந்து இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.

கோஹ்லியின் இந்த மோசமான பேட்டிங் காரணமாக பீகாரை சேர்ந்த பாபுலால் என்னும் கோஹ்லியின் ரசிகர் ஒருவர் தற்கொலையே செய்து கொண்டார்.
இந்நிலையில், கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் கோஹ்லி தனது விக்கெட்டை இரண்டு முறை இழப்பதற்கு காரணமான தென் ஆப்ரிக்காவின் பிலேண்டர் இந்த போட்டி குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
திட்டம் போட்டு காலி செய்தோம்;
இந்த போட்டியில் வெற்றி பெற்றது எங்கள் அணிக்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி திறமையான வீரர் என்பது அனைவரும் அறிந்ததே.
இதனால் அவரை ஆட்டமிழக்க செய்வதற்காக நாங்கள் தீட்டிய திட்டங்களில், அவரை வெறுப்பேற்றுமாறு ஸ்லெட்ஜிங் செய்ய கூடாது என்பதே முதன்மையானது.
அடுத்ததாக அவரை ஆப் சைடு விளையாட வைக்க வேண்டும் என பிளான் செய்தோம், அவர் அப்படி விளையாட வரும் போது பந்தை லெக் சைடு சுவிங் செய்வதே எனது நோக்கம். அது இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக கைகொடுத்தது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்வி காரணமாக எஞ்சியுள்ள மற்ற போட்டிகளில் இனி கோஹ்லியால் ஆக்ரோஷமாக செயல்பட முடியாது. இனி அவர் நிதானமாக செயல்படுவார். ஆக்ரோஷமான கோஹ்லியை அமைதியாக்கியதே எங்களுக்கு மகிழ்ச்சி என்றும் பிலேண்டர் தெரிவித்துள்ளார்.
டி.ஆர்.எஸ் ;
இரண்டாம் இன்னிங்ஸில் எனது பந்துவீச்சில் அவுட்டான கோஹ்லி, அந்த குறிப்பிட்ட பந்தில் ஏன் டி.ஆர்.எஸ் கேட்டார் என்பது தெரியவில்லை, அது நிச்சயம் அவுட் என்பது எனக்கே தெரியும் என்று தெரிவித்துள்ளார்.