நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சியின் போது இந்திய அணி வீரர்களுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் பந்து வீசினார்.
தற்போது இந்திய அணி நியூஸிலாந்து அணியுடன் விளையாடவுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அக்டோபர் 22ஆம் தேதி தொடங்குகிறது. அதன் பிறகு நியூஸிலாந்துடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது இந்தியா. இதனால், கேப்டனாக மற்றும் வீரராக சிறப்பாக விளையாடி இன்னொரு தொடரை வெல்ல விராட் கோலி காத்திருக்கிறார்.
இந்நிலையில், இந்திய வீரர்கள் நேற்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் பந்து வீசினார். 18 வயதான அர்ஜூன், அணி பயிற்சியாளர் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் மேற்பார்வையில் பந்து வீசினார்.
முதலில் அவர் இடக்கை பேட்ஸ்மேனான ஷிகர் தவானிற்கு, அதற்கு அடுத்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அனைத்து வீரர்களுக்கும் பந்து வீசினார். அர்ஜூன் தேசிய அணிக்கு பந்து வீசுவது இது முதல் முறையன்று. இதற்கு முன் இந்திய பெண்கள் அணிக்கு, ஐசிசி உலக கோப்பை போட்டி பயிற்சியின் போது பந்து வீசினார்.
#TeamIndia had a long and an intense training session in Mumbai. Here’s a ? recap. #INDvNZ pic.twitter.com/9Z3hH2TFaj
— BCCI (@BCCI) October 20, 2017
அர்ஜுன் டெண்டுல்கரை எதிர்கொண்ட மகேந்திர சிங் தோனி சில பந்துகளை பவுண்டரி கோட்டுக்கு வெளியே அனுப்பினார். விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ரோஹித் ஷர்மா ஆகியோர் கவர் ஷாட், ட்ரைவ் ஷாட் விளையாட, சில பந்துகளை சிக்ஸர் அடித்தார் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா.
நம்பர் 1 பேட்ஸ்மேனாக வலம் வந்த சச்சினை போல் இல்லாமல் அவர் மகன் பந்து வீச்சாளராக வளர்ந்து வருகிறார். அர்ஜூன் U-19 மும்பை அணியில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.