இந்திய கிரிக்கெட் அணியின் நடுவரிசை பிரச்சனை பற்றி எங்களுக்கு அக்கறை உள்ளது என இந்திய அணியின் தேர்வாளர் எம்.ஸ்.கே. பிரசாத் கூறியுள்ளார்.
இந்த வருடத்தில் இந்திய அணி ஒரு தொடரில் கூட தோல்வி பெறவில்லை. இங்கிலாந்து,ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை போன்ற அணிகளை வீழ்த்திய இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டிக்கும் சென்றது, ஆனால் இந்திய அணியின் நடுவரிசை வீரர்கள் பிரச்சனை மட்டும் தீரவே இல்லை. இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து பல வீரர்களை நடுவரிசையில் பயன்படுத்தினார்கள், ஆனால் யாரும் சொல்லிக்கொள்ளும் படி விளையாடவில்லை.
“இந்திய அணியின் நடுவரிசை இடம் பற்றி எங்களுக்கு அக்கறை உள்ளது. இதனால் தான் ஒரு பெரிய போட்டிக்கு முன்பு பல வீரர்களை பயன்படுத்தி வருகிறோம், பெரிய தொடருக்கு முன்பு ஒரு சிறந்த அணியை முடிவு செய்ய வேண்டும்,” என பிரசாத் தெரிவித்தார்.
“அது வரை பல வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்போம். ஜூனியர் இந்திய அணியில் பல வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். அவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஒரு சிறந்த அணியை தேர்வு செய்வதற்கு முன், சோதனை நடைபெறும்,” என அவர் மேலும் கூறினார்.
இந்த வருட தொடக்கத்தில் நடுவரிசையில் யுவராஜ் சிங்குக்கு வாய்ப்பளித்தார்கள். அந்த வாய்ப்பை சிறப்பாக பயன் படுத்திகொண்டு யுவராஜ் சிங், அந்த சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து விளையாடவில்லை. இதனால், அந்த இடத்தில் லோகேஷ் ராகுல், மனிஷ் பாண்டே ஆகியோருக்கு வாய்ப்பளித்தார்கள். அவர்களும் சொதப்ப, அந்த இடத்தில் ஹர்டிக் பாண்டியா இறங்கி சிறப்பாக விளையாடினார். ஆனால், ஹர்டிக் பாண்டியாவுக்கு அந்த இடம் வேண்டாம் என்று அவரை பின்னுக்கு தள்ளினார்கள்.
இதனால், அந்த இடத்தில் விளையாட கேதார் ஜாதவை அழைத்தார்கள். அவரும் சொல்லிக்கொள்ளும் படி விளையாடவில்லை. இதனால், தற்போது அந்த இடத்தில் தினேஷ் கார்த்திக் விளையாடுகிறார். நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடிய தினேஷ் கார்த்திக் 37 ரன் அடித்தார். இதனால், அவரை அந்த இடத்தில் விளையாடவைத்து அவரிடம் இருந்து பெரிய ஸ்கோரை எதிர்பார்ப்பார்கள்.