வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பன்ட் உள்ளே எடுத்து வரப்பட்டு தினேஷ் கார்த்திக் வெளியில் அமர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தனது நான்காவது போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. முதல் மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி மற்றும் ஒரு போட்டியில் தோல்வி பெற்றுள்ளது இந்தியா.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியின்போது இந்திய அணி தோல்வியை தழுவி இருந்தது. ஆகையால் மீதம் இருக்கும் இரண்டு போட்டிகளில் நிச்சயம் இரண்டையும் வெற்றி பெற்று ஆக வேண்டும். அப்போதுதான் அரை இறுதி வாய்ப்பு உறுதி செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின்போது இந்திய அணி ஃபீல்டிங் செய்து கொண்டிருக்கையில், 15வது ஓவரின்போது, தினேஷ் கார்த்திக் திடீரென முதுகு பகுதியில் வலி ஏற்பட்டதால் பாதியிலேயே வெளியேறினார். மீதம் இருக்கும் ஓவர்களில் ரிஷப் பண்ட் கீப்பிங் செய்தார்.
உடனடியாக, அவருக்கு என்ன ஆயிற்று? அவர் இனி வரும் போட்டிகளில் விளையாடுவாரா? என சமூக வலைதளங்களில் தொடர்ச்சியான கேள்விக்கணைகள் தொடுக்கப்பட்டது.
தற்போது இந்திய அணி வட்டாரத்திலிருந்து சில தகவல்கள் வந்திருக்கின்றன. ‘தினேஷ் கார்த்திக் பயிற்சி செய்து வருகிறார். அவர் உடலளவில் குணமடைந்து விட்டாலும் பாதுகாப்பு கருதி வங்கதேசம் எதிரான போட்டியில் அவரை வெளியில் அமர்த்தி வைத்து உள்ளே எடுத்து வரப்பட இருக்கிறார்.’ என தெரிகிறது.
மேலும், 4, 9 மற்றும் 9 ரன்கள் என முதல் மூன்று போட்டிகளில் படுமோசமாக விளையாடிய கேஎல் ராகுல், வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இருக்க வேண்டுமா? என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் கேஎல் ராகுலுக்கு இன்னும் கூடுதல் வாய்ப்பு கொடுத்து அவரது நல்ல மனநிலையை வளர்ப்பதற்காக அணி நிர்வாகம் முடிவு செய்து வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
அடுத்ததாக, தீபக் ஹூடா வெளியில் அமர்த்தப்பட்டு அக்சர் பட்டேல் மீண்டும் அணிக்கு திரும்புவதாகவும் தகவல்கள் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.