ரோகித் சர்மா ஒழுங்கா ஆடலன்னா, அதுக்கு அவரோட பேட்டிங் சரியில்லை.. ஐபிஎல்ல குறை சொல்லாதீங்க; ஐபிஎல் பலருக்கு வாழ்க்கை கொடுத்திருக்கு – கம்பீர் பேட்டி!

ஐபிஎல் இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு வாரம்; இதை யாரும் குறை சொல்லாதீர்கள் என்று கூறியுள்ளார் கவுதம் கம்பீர்.

டி20 உலக கோப்பையில் இந்திய அணி அறையிறுதியோடு தோல்வியடைந்து வெளியேறியதை தற்போது வரை ரசிகர்கள் பலர் மறக்கவில்லை. தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

குறிப்பாக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய துவக்க வீரர்கள் ராகுல் மற்றும் ரோகித் சர்மா இருவரின் மீதும் வைக்கப்படும் விமர்சனங்கள் இதுவரை நிற்கவில்லை. ரோகித் சர்மா 116 ரன்களையும், கே எல் ராகுல் 128 ரன்களையும் 6 போட்டிகளில் அடித்தது தான் இந்திய அணிக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்திருக்கிறது.

ஏனெனில் இருவரும் கேப்டன் மற்றும் துணை கேப்டன் பொறுப்பில் இருக்கின்றனர். அந்த பொறுப்பை உணர்ந்து செயல்படாதது இத்தகைய தோல்விக்கு வழி வகுத்திருக்கிறது என்றும் விமர்சனங்களில் முன் வைக்கப்படுகிறது.

அத்துடன் இவர்கள் இருவரும் ஐபிஎல் போட்டிகளில் நன்றாக விளையாடுகிறார்கள். ஆனால் சர்வதேச போட்டி என்று வந்துவிட்டால் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். அது மட்டும் எப்படி? என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.

இதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ள கௌதம் கம்பீர், “வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றால், அதற்கு அவர்களது தனிப்பட்ட பேட்டிங்கை மட்டுமே குறைக்கூற வேண்டும். ஒட்டுமொத்த ஐபிஎல்-லையும் குறை கூறுவது சரியாக இருக்காது.” என்றார்.

கம்பீர் பேட்டியளித்ததாவது: “ஐபிஎல் போட்டி பல இளம் வீரர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருந்து வருகிறது. ஐபிஎல் வந்த பிறகு தான் இந்திய அணிக்கு பயிற்சியாளர்களாக இந்திய வீரர்களே வருகின்றனர். மேலும் பல இளம் வீரர்கள் இதன் மூலம் இந்தியாவில் வாய்ப்பு கிடைத்து விளையாடி வருகின்றனர்.

ஒரு வீரர் சரியாக விளையாடவில்லை என்றால் அது அவரது தனிப்பட்ட பேட்டிங் மட்டுமே காரணமாக இருக்க முடியும். ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை எப்படி காரணமாக கூற முடியும்.

ஐபிஎல் போன்ற லீக் போட்டி பல விளையாட்டுகளுக்கு முன் உதாரணமாகவும் இருந்து வருகிறது. ஐபிஎல் வந்த பிறகே கபடி, கால்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு லீக் போட்டிகள் வந்திருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.

இந்திய கிரிக்கெட்டிற்கு ஐபிஎல் ஒரு வரப்பிரசாதம். இத்துடன் ஐபிஎல் போட்டிகள் நிற்கப்போவதில்லை. இன்னும் பல இளம் வீரர்களை இந்திய அணிக்கு கண்டுபிடித்துக் கொடுக்கப் போகிறது.” என்று கம்பீர் பேசினார்.

Mohamed:

This website uses cookies.