இலங்கையுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில், கடந்த 2 போட்டிகளிலும் இந்திய அணி வீரர்களின் ஆட்டம் திருப்தி அளிப்பதாக, கேப்டன் விராட் கோஹ்லி மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. இதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில், இந்திய அணி, 2க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று, தொடரைக் கைப்பற்றியுள்ளது
இதன்மூலமாக, தொடர்ந்து, 8வது முறையாக, டெஸ்ட் தொடர் வென்று, இந்திய அணி புதிய சாதனையையும் படைத்துள்ளது. இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் விராட் கோஹ்லி, இந்திய வீரர்களின் ஒட்டுமொத்த செயல்பாடு, திருப்திகரமாக இருந்ததென கூறி வீரர்களுக்கு உற்சாகம் கொடுத்துள்ளார்.
இதை பற்றி மேலும் கூறுகையில்,”போட்டி நடைபெற்ற ஆடுகளமும் இந்திய வீரர்களுக்கு நல்ல உத்வேகம் அளித்தது. இதனால், தொடக்கம் முதல் இறுதி வரை இயல்பான அதேசமயம், வெற்றிகரமான முறையில் இந்திய வீரர்கள் விளையாடினர். பொறுமையாகச் செயல்பட்டால் மட்டுமே வெற்றி சாத்தியம் என்பதை நான் உணர்ந்துகொண்டுள்ளேன். இலங்கை போன்ற சர்வதேச அணிகள் திரும்பி எழும் என எதிர்பார்த்தோம், அது நடந்தது. ஆனால், ரஹானே, புஜாரா, சாஹா, ஜடேஜா உள்ளிட்ட அனைத்து வீரர்களின் செயல்பாடு திருப்திகரமாக இருந்தது. அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்,” என விராட் கோலி கூறினார்.